இராணுவத் தகப்பன்மார்களும் இந்தியத் தலித்துகளும்

செந்தலைக் குருவி இதழின் முகப்புப் படம்

இந்திய வரலாற்றில் இராணுவப் பணியானது, ஆதிக்கச் சாதியினருக்கு எதிரான தலித்துகளின் தலைநிமிர்வில் முக்கியப் பங்காற்றியுள்ளது. இங்கு நிலவிய பல்வேறு சமூக முரண்பாடுகளைக் களைவதற்கும் பொருளியல் தளத்தில் தன்னை உயர்த்திக் கொள்வதற்கும் காலனியாதிக்கக் காலத்தில் உருவாக்கப்பட்ட இராணுவப் படைப்பிரிவுகளில் தலித்துகள் தங்களை இணைத்துக் கொண்டு வெற்றி பெற்ற வரலாறு உண்டு. உதாரணமாக, “ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியால், பறையர்களை மட்டுமே கொண்ட ஒரு ரெஜிமென்ட் உருவாக்கப்பட்டது. ‘குயின்ஸ் ஓன் ஸப்பர் அண்ட் மைனர்ஸ்’ என்ற பெயரால் அந்த ரெஜிமென்ட் அழைக்கப்பட்டது. பொ.ஆ. 19ஆம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை இயங்கி வந்த அப்படையின் செயல்பாடுகள் தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்கது” என ஆய்வாளர் எஸ். ஜெயசீல ஸ்டீபன் குறிப்பிடுவார். அதுபோல, தலித்துகளின் சுயமரியாதைப் போராட்டத்திற்கான விளைவாக, ஜனவரி 1, 1818இல் நடைபெற்ற பீமா கோரேகான் போரும் நம் கவனத்திற்குரியது.

இந்தப் பின்புலத்தில் இந்திய அளவிலான ஒடுக்கப்பட்ட / விளிம்புநிலை மக்களின் உரிமைக்காகப் போராடிய புரட்சியாளர், பாபாசாகேப் அம்பேத்கரையும் அணுகமுடியும். பலவேளைகளில் பாபாசாகேப்பின் மீது எழுகின்ற மரியாதை / காதலைப் போல் அவரது தந்தையார் மீதும் ஆவல் உண்டாகும். ஏனெனில் பாபாசாகேப்பிற்கு ஓர் இராணுவத் தந்தை இல்லாதிருந்தால், இன்று உலகம் போற்றும் மாமனிதராக அவர் உயர்ந்திருப்பாரா? என்பது விடையில்லாக் கேள்வி. இது பாபாசாகேப்பையும் இந்தச் சமூகத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பையும் குறைத்து மதிப்பிடும் வகையில் முன்மொழியப்பட்ட கருத்தல்ல. மாறாக, ஒடுக்கப்பட்ட பின்புலத்தில் இருப்பவர்கள் மேலெழக் கிடைத்திருக்கக் கூடிய உந்துதல் பற்றியது.

இதை உள்ளபடியே, காலஞ்சென்ற அறிஞர் ராஜ்கௌதமனுக்கும் பொருத்திப் பார்க்கலாம். சிலுவை என்றறியப்படும் ராஜ்கௌதமனுக்குத் தனது தந்தையை அறவே பிடிக்காது என்பதைப் பல இடங்களில் அவரே பதிவு செய்து பார்த்திருப்போம், கேட்டிருப்போம். ஆனால், சிலுவையின் ஆரம்பகால வாழ்க்கையின் ஏற்றப்பாடுகளில் அவரது தந்தையின் இடையீடு எந்த நோக்கத்திலானது என்பதைக் கவனித்தல் அவசியமாகிறது. அவ்விருவருக்குமான உறவு சிறிது கறாரான தன்மையோடே தொடர்ந்திருந்தாலும் ஓர் இராணுவ வீரரின் அடிப்படைத் தகுதியான ‘ஒழுங்கு’ (Discipline) என்பதைத் தான் அவரது தந்தையார் தனது சந்ததிகளுக்கும் கடத்துகிறார். மேலும் அடிப்படை ஒழுங்குடன் கூடிய கல்வியையும் இந்தப் பின்புலத்திலேயே தான் சிலுவை பெற்றுக் கொள்கிறார். குறிப்பாக, தலித்துகளின் சமூக வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியதில் கிறித்தவ மிஷனரிகளின் கல்விப்புலச் செயல்பாடுகளும் முக்கியமான ஒரு காரணியாக உள்ளது. மிஷனரிகளின் இதுபோன்ற செயல்பாடுகள் காலனிய ஆதிக்கத்தைத் தமிழ் மண்ணில் நிலைப்படுத்துவதற்கான அரசியல் முயற்சியாகவே கைக்கொள்ளப்பட்டலும் ஒடுக்கப்பட்டவர்களின் தலைநிமிர்விற்கும் ஓரளவு உதவியதே நம் கவனத்திற்குரியது.

இங்ஙனம் ஓர் இராணுவப் பின்புலம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்ததால் மட்டுமே மேற்குறிப்பிட்ட இருவரின் வளர்ச்சி நடைபெற்றது எனக் குறுக்கிக் கொள்ளத் தேவையில்லை. தலித்துகளால் கைக்கொள்ளப்படும் அரசு / அதிகாரம் சார்ந்த பணிப்பிரிவு, ஒரு தலைமுறையின் மாற்றத்திற்கு எவ்வாறு உதவும் என்கிற வகையில் பொருள்கோடல் செய்தால் இதன் சாராம்சத்தை விளங்கிக் கொள்ளலாம். கண்ணுக்குத் தெரிந்தவகையிலான இராணுவத் தகப்பன்மார்களின் இந்தச் செயல்பாடுகள் மேற்சொன்ன இருவரையும் கால ஓட்டத்தில் நமக்களித்தது. குறிப்பிட்ட ஓரிருவரால் மட்டுமே இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் பொழுது, கல்வி மற்றும் சமூகப் புரிதலுடன் கூடிய அரசதிகாரம் பெறும் பல்வேறு தலித் தகப்பன்மார்களால் இந்தச் சமூகம் எவ்வாறு வழிநடத்தப்படும் என்பதை எண்ணிப் பார்க்கத்தான் ஆவல் மேலெழுகிறது. இவ்விடத்தில் தனது தந்தையால் கல்வி வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்ட தாதா இரட்டைமலை சீனிவாசனையும் இராணுவ வீரராகக் கிளர்ந்தெழுந்த தியாகி இம்மானுவேல் சேகரனாரையும் நினைவுகூரலாம்.

இங்கு தலித் மக்கள் இராணுவத்தில் சேர்வதை ஆதரிப்பதோ அல்லது அதனால் மட்டுமே அவர்களின் விடுதலைக்கான தீர்வு வந்துவிடும் எனக் கூறுவதோ நம் நோக்கமல்ல; ஏனெனில் விதிவிலக்குகள் ஆயிரம் இருக்கலாம். ஆயினும் உடலுறுதியையும் மனவுறுதியையும் ஒருசேர வழங்கிய அந்தப் பணியின் விளைச்சல், சமூக அநீதியை எதிர்ப்பதற்கான துணிவைத் தலித்துகளுக்கு வழங்கியதை மறுப்பதற்கில்லை. அந்தத் துணிவே சமூக ஒழுங்கையும் சமத்துவச் சிந்தனையையும் தன் சந்ததிகளுக்குக் கடத்தியது. எனவே, அதன் வெகுமதியைப் பெருமளவில் அறுவடை செய்ய அரசியலதிகாரத்தை நோக்கி நாம் நகர வேண்டியது அவசியமாகிறது.


“தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்” (அறத்துப்பால்; மக்கட்பேறு: குறள் 67)

இந்தப் புரிதலில் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடும் தூண்டுதலைக் கொடுத்த / கொடுத்துக் கொண்டிருக்கும் பல தகப்பன்மார்களை மனங்கொள்வோம். அவ்வரிசையில் பாபாசாகேப்பின் தந்தை திரு. இராம்ஜி மாலோஜி சக்பால் மற்றும் ராஜ்கௌதமனின் தந்தை திரு. சூசைராஜ் அவர்களின் நினைவைப் போற்றுவோம். ‘தலித் பண்பாடு’ குறித்த பல திறப்புகளை ஏற்படுத்திய, தமிழ்ச் சமூகத்தின் நவீன மனம் கொண்ட அறிஞர் ராஜ்கௌதமனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொள்வோம்.!

நன்றி: இதழாசிரியர் முத்து கந்தன், செந்தலைக் குருவி கலை இலக்கியப் பண்பாட்டு காலாண்டிதழ் - மார்ச் 2025.

Comments