தீண்டாத வசந்தம்

Art By: B. Venkatesan

தீண்டாத வசந்தம் தொடரும் நினைவுகள்

"இந்த வசந்தம் அன்றும் தீண்டாததே,
இன்றும் தீண்டாததே.!
பிறந்த சாதி தீண்டாதது,
செய்ய விரும்பிய போராட்டமும் தடை செய்யப்பட்டது.
அது நேற்றாக இருக்கலாம்
இன்றாகவும் இருக்கலாம்
எந்தக் காலமாகவாவது இருக்கலாம்.
இந்த வசந்தம் அன்றும் தீண்டாததே,
இன்றும் தீண்டாததே.!"

புத்தகத்தின் முன்னுரையில் இடம்பெற்றுள்ள இக்கவிதை வரிகளை அத்தனைச் சுலபமாகக் கடந்துவிட முடியவில்லை. வரலாற்றின் கோரமுகங்களில் சாதி எனும் மனநோய்க்கு எதிரான விளிம்புநிலை மக்களின் எத்தனையோ போராட்டங்களும் வலிகளும் இன்னும் முழுமையாகப் பதிவு செய்யப்படாமல் தான் இருக்கின்றன. சாதி அடுக்கின் (Hierarchy) படிநிலைகளில் மேல் / கீழாக அமைந்துவிட்ட ஒவ்வொரு குழுக்களும் இக்கட்டமைப்பின் பலன்களைத் தனக்கேயுரிய அதிகார பலத்தோடு அனுபவித்து வருகின்றன. பெருமளவில் ஒடுக்குதலுக்கு உள்ளான தலித்துகளின் உழைப்பை மட்டும் உறிந்துகொண்டு, சமூக மதிப்பில் அவர்களைத் தீண்டத்தகாதவராக்கி நிலைபெறச் செய்தமை, வரலாற்றில் மாபெரும் துரோக நிகழ்வாகும். அப்போக்கு இன்றளவும் தொடர்ந்து கொண்டிருப்பதை யாராலும் மறுக்கவியலாது. ஒடுக்குதலின் அளவுகோல்களில் மாற்றம் நிகழ்ந்துள்ளதே தவிர, அது வெவ்வேறு வடிவங்களில் திரிபடைந்துவிட்டதை மிக எளிமையாக அவதானிக்கலாம். இத்தகைய சூழலில் மிகுந்த நெஞ்சுரத்துடன் கல்வி மற்றும் அதிகாரத்தை நோக்கி நகரவேண்டிய சூழல், தலித் மக்களின் அத்தியாவசியத் தேவையாகியுள்ளது. அந்நகர்வின் முதற்படியாக முன்னோர்களின் போராட்ட வரலாற்றினை அறிவது மிகுந்த உத்வேகமளிக்கும். அதற்கு இந்த நூலும் ஒருவகையில் உதவும்.

வரலாற்றுத் தேடல் என்பது அத்துனை எளிதான காரியமல்ல. அது ஒவ்வொரு கடைநிலை மனிதனின் வாழ்க்கையையும் பதிவு செய்வதாய் இருத்தல் வேண்டும். வீரம், காதல் மட்டும் பேசிச்சென்ற நமது பன்னூற்றாண்டுப் பெருமைகளில் வெளிப்படாமல் புதையுண்டு போனவர்கள் ஏராளம். அதிலும் குறிப்பாகத் தலித் மக்கள் பலர் அடங்குவர். காலத்தின் பக்கங்களில் கிழித்தெறியப்பட்ட அம்மக்களின் வசந்தம் இப்புத்தகத்தின் வரிகளால் நம்மைத் தீண்டும்; மறைக்கப்பட்ட - மறுக்கப்பட்ட பல உண்மைகளைப் பேசும், நம்மை நெருடும், நம்முடன் சிரிக்கும், அழுகும், கோபம் கொள்ளும், காதல் பழக்கும், கதைகள் பேசும், பாட்டுப் பாடும், நடனமாடும், போராடத் தூண்டும், உறையச் செய்யும், மனிதம் பேசும்.!

இந்த வரலாற்றின் இத்தனைச் சிறப்புகளையும் ஒரு தீண்டாத வசந்தமாய் மாற்றியதையே, அதிகாரத்துவத்தின் வெற்றியென இந்நூல் அடிக்கோடிட்டுக் காட்டும். அவ்வகையில் ஐந்தாறு தலைமுறைகளுக்கான ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியைப் பதிவுசெய்ய 15 - 20 ஆண்டுகள் சிரத்தை மேற்கொண்ட எழுத்தாளரின் உழைப்பு மிகச்சிறந்த மறுமலர்ச்சி நாவலாக நம் கைகளில் அல்ல, நெஞ்சில் தவழும். 

இந்தப் புத்தகம் உருவான பின்புலத்தை அதன் பின் அட்டைப்படத்தில் இவ்வாறாக விளக்குகிறார் நூலாசிரியர் ஜி. கல்யாணராவ்.

'நான் பிறந்த சாதி தீண்டப்படாதது. நான் விரும்பிய போராட்டம், ஒடுக்கப்பட்ட போராட்டம். ஆனால், இவை இரண்டுமே அற்புதமான வசந்தங்கள்! அவை ஏன் தீண்டப்படாதவை ஆயின? என் கேள்வியே அங்கிருந்துதான் ஆரம்பமாயிற்று.

வரலாறு எவ்வளவோ படித்தேன். டி.டி. கோசாம்பி, ரொமில்லா தாப்பர், மஜும்தார்... என்று எத்தனையோ ஆயிரம் பக்கங்கள் படித்தேன். அவர்கள் புதிய அம்சங்களைக் கூறியிருக்கிறார்கள். புதிய கோணங்களைக் காட்டியிருக்கிறார்கள். அவற்றிலும் ஏதோ ஒன்று காணப்படவில்லை. என் பக்கம் தென்படவில்லை. அதைத்தான் தேடினேன். அந்தத் தேடலே ‘தீண்டாத வசந்தம்’. சரித்திரத்தை என் முன்னோர்களின் பார்வையைக் கொண்டு பார்த்தேன்.

இதுபோன்ற முயற்சி தெலுங்கு இலக்கியத்தில் இதுதான் முதல் முயற்சி எனக் கருதுகிறேன்.

இந்த நாட்டிலே வர்க்கம் இருக்கிறது. அதன் பக்கத்திலே சாதியும் இருக்கிறது. இங்கே காற்றுக்கும், பாசனக் கால்வாய்களுக்கும், விளையும் பூமிக்கும், கோவிலுக்கும், குளத்துக்கும், பள்ளிக்கூடத்திற்கும், ஊர் பொது இடத்துக்கும், உண்ணும் உணவுக்கும், குடிக்கும் தண்ணீருக்கும், உடுத்தும் உடைக்கும், பேசும் மொழிக்கும், இலக்கியத்திற்கும், கலாச்சாரத்திற்கும், அரசுக்கும், அதன் சட்டத்திற்கும், நீதிக்கும், நீதிமன்றத்திற்கும், பிணத்திற்கும், மயானத்திற்கும், சாமிக்கும், பேய்க்கும்கூட சாதி இருக்கிறது’.

அந்தவகையில் தலித் இலக்கிய வாசிப்பில் ஈடுபடும் ஒவ்வொருவரும் கட்டாயமாக வாசிக்க வேண்டிய நூலாகும்.

நூலின் அட்டைப் படம்
தெலுங்கில் - ஜி. கல்யாண ராவ்
தமிழில் - ஏ.ஜி. எத்திராஜுலு
வெளியீடு: சிந்தன் புக்ஸ்
விலை: ரூ. 300

Comments