பாபாசாகேப் அம்பேத்கரும் பௌத்த உறுதிமொழிகளும்

அம்பேத்கரிய பௌத்த நெறியின் அடிப்படைக் கொள்கைகள்:

1 - நான் பிரம்மன், விஷ்ணு மற்றும் மகேஸ்வரன் (சிவன்) ஆகிய கடவுளர்கள் மீது நம்பிக்கை வைக்க மாட்டேன். அவர்களை வணங்கவும் மாட்டேன்.
2 - நான் இராமன் மற்றும் கிருஷ்ணன் மீது நம்பிக்கை வைக்க மாட்டேன். அவர்களை வணங்கவும் மாட்டேன்.
3 - நான் கௌரி, கணபதி மற்றும் பிற இந்து ஆண், பெண் கடவுளர்கள் மீது நம்பிக்கை வைக்க மாட்டேன். அவர்களை வணங்கவும் மாட்டேன்.
4 - நான் கடவுள் அவதாரக் கொள்கையை நம்பவில்லை.
5 - 'புத்தர்' விஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படுவதை நான் நம்பவில்லை, நம்பவும் மாட்டேன்; இதைப் பொய்யான விஷமப் பிரச்சாரமாகக் கருதுகிறேன்.
6 - ஒருவர் இறந்தால் 'திதி' செய்யும் சடங்கையோ, 'பிண்டம்' வைக்கும் சடங்கையோ செய்ய மாட்டேன்.
7 - புத்தருடைய கொள்கைகள் மற்றும் அறிவுரைகளுக்கு எதிராக ஒருபோதும் நான் செயல்பட மாட்டேன்.
8 - நான் பார்ப்பனர்களை வைத்து எவ்விதச் சடங்குகளையும் செய்ய மாட்டேன்.
9 - அனைத்து மனிதர்களும் சமமானவர்கள் என்ற கொள்கையை நான் கடைபிடிப்பேன்.
10 - நான் சமத்துவத்தை நிலைநாட்ட பெரும் முயற்சிகளை மேற்கொள்வேன்.
11 - நான் புத்தர் வகுத்த எண் மார்க்கப் பாதையைப் பின்பற்றுவேன்.
12 - புத்தர் வகுத்த பத்து ஒழுக்கங்களை நான் கடைபிடிப்பேன்.
13 - நான் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டி அவற்றை அக்கறையுடன் பராமரிப்பேன்.
14 - நான் திருட மாட்டேன்.
15 - நான் பொய் சொல்ல மாட்டேன்.
16 - நான் கூடா ஒழுக்கமான பிறர்மனை விழைதலை முற்றிலும் தவிர்ப்பேன்.
17 - மனதை மயக்கச் செய்யும் பொருட்களை நான் அருந்த மாட்டேன்.
18 - பவுத்தத்தின் மூன்று கொள்கைகளான மெய்யறிவு, அறநெறி, வாஞ்சை ஆகியவற்றின் படி வாழ்வேன்.
19 - நான் பவுத்தத்தைத் தழுவுவதன் மூலம் மனித இனம் செழித்தோங்குவதற்கு எதிரான, சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்ட, மனிதர்களை இழிவாக நடத்துகிற என் பழைய மதமான இந்து மதத்தை இன்றோடு விட்டொழிக்கிறேன்.
20 - பௌத்த தம்மம் ஒன்றே மேன்மையான அறநெறி என்று உறுதியாக நம்புகிறேன்.
21 - நான் புதியதொரு வாழ்க்கைக்குள் நுழைவதாக நம்புகிறேன்.
22 - நான் இனி புத்தரின் கோட்பாடுகளைப் பின்பற்றி, என் வாழ்க்கையைத் தொடருவேன் என்று உளமார உறுதி செய்கிறேன்.

=> இவையே, டாக்டர் அம்பேத்கர் அவர்களால் 14.10.1956 அன்று, நாக்பூரில் ஏறக்குறைய பத்து இலட்சம் மக்களுடன் பௌத்தம் தழுவிய வரலாற்றுச் சிறப்புமிகு நிகழ்வில் அவராலும் அம்மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட 22 உறுதிமொழிகள்.

Comments

Popular Posts