பேபி காம்ப்ளி
![]() |
படம்: பேபி தாய் காம்ப்ளி |
தலித் வரலாறு குறித்த வாசிப்புகளில் மிக முக்கியமான இடத்தைப் பெறும் நூலாக, 'பேபி காம்ப்ளி'யை வரையறுக்கலாம். இது மகாராஷ்டிரப் பகுதி மஹர் சமூக மக்களின் வாழ்க்கையைப் பற்றிய வரலாற்றைத் தெளிவுபடுத்தும் நூலாகும். காம்ப்ளியின் சுயசரிதையாக விரியும் இந்நூல் பாபாசாகேப் அம்பேத்கரின் வருகைக்கு முன் மஹர் சமுதாயம் எவ்வாறு இருந்தது என்றவாறு தன் நினைவாற்றலை மீட்டெடுக்கிறது. மஹர்களின் உள் உலகம், இந்திய சமூகத்தின் சாதிய அடக்குமுறை, ஆணாதிக்கம் பற்றிய பல்வேறு தரவுகளை விவரிக்கிறது. அதேவேளை நூலின் எழுத்து சுயபரிதாபம் தேடும் வகையில் அமையவில்லை. மஹர் மக்களின் வாழ்க்கை வட்டச் சடங்குகள், வழிபாடுகள், மூடநம்பிக்கைகள், மகிழ்ச்சிகள் மற்றும் துக்கங்கள் என வாழ்வின் பல்வேறு நகர்வுகளையும் நூலாசிரியர் மிகத்தெளிவாக உயிர்ப்பிக்கிறார்.
"பேபி காம்ப்ளி - தனிப்பட்ட கதைகளின் வரம்புகளை உடைத்த ஒரு வரலாற்று மற்றும் அரசியல் பதிவாக, ஒரு பெண்ணிய விமர்சனமாக, பிராமண இந்து மதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் சபிக்கப்பட்ட மக்களின் நினைவுக் குறிப்பாக விளங்குகிறது".
_________________________________________________________________
பாபாசாகேப்பின் வருகைக்கு முன்னும் பின்னுமான வாழ்க்கைமுறையின் மாற்றத்தைக் கீழுள்ள வரிகளில் உணரலாம்.
"இந்துமதம் எவ்வளவு மிருகத்தனமான ஒன்று.! உங்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் வசதியும் செல்வமும் மஹர் சாதியினருடைய இரத்தம். அந்த விறகுகளில் மஹர் சாதிப் பெண்களின் இரத்தம் தோய்ந்திருக்கிறது. அவர்கள் கால்களில் முட்கள் தைக்கும் பொழுது, இரத்தம் வெளிப்பட்டு விறகுகளில் படிந்திருக்கும். சில சமயங்களில் மரத்திற்குப் பதிலாக அவர்கள் தங்கள் உடல் உறுப்புகளை வெட்டிக் கொள்வதால் இரத்தம் வடிந்து, விறகுகளை நனைத்திருக்கும். மஹர் சாதிப் பெண்களின் வாழ்க்கை அந்த விறகுகளில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் வேறு எதுவோ (தலைமயிர், புடவை நூல்கள்) அதில் ஒட்டிக் கொண்டிருப்பதற்கு பாப்பாத்திகள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மஹர் சாதிப் பெண்கள் வயல்களில் வேலை செய்யும் பொழுது அவர்கள் சிந்தும் வியர்வையில் தானியங்கள் நனைந்திருக்கும். அந்த தானியம் உங்களுடைய சுத்தமான சத்தான உணவு சமைக்க உதவியிருக்கும். அதை நீங்கள் வெளிப்படையாகச் சுவைத்து உணர்கிறீர்கள். உங்கள் பங்களாக்கள் மஹர் சாதியினரின் வியர்வையும் இரத்தமும் கலந்த மண்ணால் கட்டப்பட்டுள்ளன. அது உங்கள் தோலை அழுகச் செய்துவிட்டதா.? நீங்கள் அவர்கள் இரத்தத்தைக் குடித்துவிட்டு, அவர்களுடைய வேதனை எனும் படுக்கையில் வசதியாகப் படுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது உங்களைத் தீட்டுப்பட வைக்கவில்லையா.? விவசாயிகள் தங்கள் எருதுகளுக்கு மூக்கணாங்கயிறு கட்டி அவற்றைக் கட்டுப்படுத்துவது போல, நீங்கள் மஹர் சாதி மக்களுக்கு அறியாமை எனும் மூக்கணாங்கயிறு கட்டி வைத்துள்ளீர்கள். நீங்கள் எங்களைத் தீட்டு எனும் சவுக்கால் அடித்துக் கொண்டிருக்கிறீர்கள். இதைத்தான் உங்களுடைய சுயநலம் மிகுந்த மதம் எங்களுக்குக் கொடுத்துள்ளது. உங்கள் மதம் கொஞ்சங்கூட யோக்கியதையற்றது என்பதை இன்று நாங்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டுவிட்டோம். எங்களுக்கு இதைப் புரியவைத்தவர், மிருகங்களாக இருந்த எங்களை மனிதர்களாக்கியவர், எங்கள் தன்மையை மாற்றியமைத்த சிற்பி, நேர்மையும் பண்பும் கொண்ட தங்கமான டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர்".
- பேபி காம்ப்ளி - சுதந்திரக் காற்று (The Prisons We Broke) நூலிலிருந்து.. (பக் 87, 88)
![]() |
நூலின் அட்டைப் படம் |
Comments
Post a Comment