தமிழ் - தமிழர் - தமிழ்ஒளி: பகுதி II

உலகின் பிற நாகரிகங்களைப் போலவே, தமிழ்ச் சமுதாயத்தின் தொன்மையும் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டமான பழைய கற்காலம், புதிய கற்காலம் தொடங்கி பெருங்கற்படைக் காலத்தைக் கடந்து இன்றைய நிலையில் பல்பரிணாம வளர்ச்சிக்கு ஆட்பட்டு வந்துள்ளதைக் காண்கிறோம். பண்டைய மனித குலத்தைப் பற்றிய வளர்ச்சிகளைக் கணக்கிட்டுக் கண்டறிந்த மார்கன் என்பவரைப் பின்பற்றி, ‘குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்கிற நூலை யாத்த ஏங்கல்ஸின் (Engels) விஞ்ஞானக் கண்ணோட்டத்தைத் தொன்மைத் தமிழர் வரலாற்றில் ஆய்ந்து மதிப்பிடுகிறார் கவிஞர் தமிழ்ஒளி. அதனைப் பின்வருமாறு காணலாம்.

தமிழரும் தமிழ்ஒளியும்

பண்டைத் தமிழரின் மிகப்பெரும் அறிவுக் கருவூலமாகக் கருதப்படும் தொல்காப்பியம் மார்க்சியத் தத்துவத்தின்படி, பொருண் முதன்மைக் கருத்தைச் சார்ந்தது. நிலம், தீ, நீர், வளி, விசும்பு ஆகிய ஐம்பூதங்களின் சேர்க்கையே உலகம் என்ற தொல்காப்பியம் முழுமுதற் கடவுளை மறுக்கிறது. ஆனால், இதற்கு நேரெதிரான ஆரியமானது, கடவுட் கொள்கையை வலியுறுத்தும் எண்ண முதற் கருத்தினை (Idealism) அடிப்படையாகக் கொண்டது. இயற்கை நெறியினை மையப்படுத்திய தமிழ்ச் சமுதாயம் வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களின் தொடக்கத்தில், காடுகளில் அலைந்து காய், கனிகளை உண்டு இயற்கைச் சீற்றங்களுக்கும் வனவிலங்குகளுக்கும் அஞ்சி நடுங்கிய காட்டுநிலைச் (Savagery) சமூகமாக இருந்தது. அவ்வாறு காடுகளில் ஒண்டி வாழ்ந்த இக்காலகட்டம் தாய்வழிச் சமூக அமைப்பினையே முதன்மையாக்கி நகர்ந்தது. குடும்பம் குடும்பமாய்த் தனித்து வாழ்ந்த நிலை, காலப்போக்கில் கணங்களாக (Clan) ஒன்றுசேர்ந்து, மிருகங்களைக் கூட்டாக எதிர்த்து, வேட்டையாடி உணவாக எடுத்துக்கொண்டது. இவ்வாறு கூட்டுச் சமுதாயமாகி வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த நிலை காட்டுமிராண்டி நிலை (Barbarism) எனப்பட்டது. இந்த இரண்டாம் நிலையில் தான் கணங்களுக்குத் தலைமை பூண்ட ஆண் தலைவனைக் கொண்ட தந்தைவழிச் சமூகமாக மாறியது.

இக்காட்டுமிராண்டிச் சமூகத்தின் இறுதிக் கட்டத்தில் தோன்றிய தலைவனாகவே சிவன் பார்க்கப்படுகிறான். “அவன் காட்டுமிராண்டிச் சமுதாயத்தை நாகரிக நிலையை நோக்கி அழைத்துச் செல்லும் படிகளாய் அமைந்த நெருப்பையும் இரும்பையும் கண்டு, சமுதாயத்திற்கு வழங்கினான். காட்டு வாழ்க்கையிற் கண்ட காளையை அடக்கி அதை வாகனம் ஆக்கினான். இவ்வாறு அவன் ஆக்கங்கள் பல கண்டது மட்டுமின்றி, நாவலந் தீவினுள் நுழைந்த காட்டுச் சாதியாகிய அவுணர்களைப் பொருது தொலைத்தான். பசுவும் மானும் கூட அவன் பழக்கிய பிராணிகளேயாம். காட்டு வாழ்க்கையில் மனிதனை அச்சுறுத்தி வந்த பாம்பின் நஞ்சை வெல்லும் முறையை அவன் கண்டான். அவன் காலத்தில் களி மண்ணால் பாண்டம் செய்யும் முறையும், இரும்பை உருக்கிக் கருவிகள் வடிக்கும் முறையும் தோன்றின. இவன் காலத்தில் தான், மீன் உணவுப்பொருளாய் மாறியது” (தமிழர் சமுதாயம்; 83). இவ்வாறு, சிவனைத் தொடர்ந்த கணங்கள் (குடும்பங்கள்) காடு மற்றும் மலைகளில் தங்களது வாழ்வை அமைத்துக்கொண்டனர். இதன் பின்னரே தமிழ்ச் சமுதாயத்தில் திணை சார்ந்த வாழ்வியல் தோன்றுகிறது. திணைகள் ஏற்படாத காலத்தில் சிவன் மக்கள் தொகுதி முழுமைக்கும் தலைவனாக இருந்தான். இதனாலேயே எந்த ஒரு தனித் திணைக்குரிய தலைவனாகவும் சிவன் குறிக்கப்படவில்லை. அவனே தமிழ்மொழிக்கு முதலில் எழுத்தாக்கங்கண்ட தமிழ் முதல்வனாவான்; நிலைத்த வாழ்க்கை பெறாத ஒரு காலத்தில் கணங்களின் தலைவனாய் விளங்கி, பொதியந் தொடங்கி இமயம் வரை சுற்றித் திரிந்தான் என்பதாகப் புதிய நோக்கில் தமது சிந்தனையை வெளிப்படுத்துகிறார் தமிழ்ஒளி.

மேலும் நாகரிக நிலையில் (Civilization) திணைச் சமூகங்கள் வளர்ச்சி பெற்று நிலப்பிரபுத்துவத் தன்மை ஓங்கிய வேளை, ஆரியச் சமூகத்தின் வருகையும் ஒருபுறம் நிகழ்ந்தேறியது. இந்தியாவின் வடபுலத்தில் நுழைந்த அவர்கள் வடஇந்தியக் குடிகளை வென்று, அங்கே அரசுரிமை கண்டு, இனக்கலப்பிற்கும் ஆளாயினர் என்பதாகவும் குறிப்பிடுகிறார். வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பாக இனக்கலப்பும் சமூகக் கலப்பும் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது மானிடவியல், தொல்லியலாளர்கள் பலராலும் முன்மொழியப்படும் கருத்து. வரலாற்று ஆய்வுகளும் கூட, வட இந்தியப் பகுதி திராவிட மக்களோடு வாழ்ந்த ஆரிய இனத்தினர், மெல்லமெல்லத் திராவிட நிலத்தின் அனைத்துப் பண்பாட்டு அசைவுகளிலும் வலுப்பெறத் துவங்கியதை மெய்ப்பிக்கிறது. ‘பறையன் சிவப்பும் பார்ப்பான் கருப்பும்’ என்கிற பழமொழி கூட இந்தச் சமூகக் கலப்பினைப் பேசுவதாக அமைந்துள்ளதை இதன்வழி அவதானிக்கலாம்.

அதைத்தொடர்ந்து, ஆரியர்கள் தென்புலம் நோக்கியும் வருகையை அதிகரித்து முடியுடை வேந்தர்களை அணுகித் தலைமை பெற முயன்றனர். “சேர, சோழ, பாண்டியக் குடும்பங்கள் வந்தேறிகளுக்கு வாழ்வளித்தனவேனும், தமிழைக் காக்கும் கொள்கையைத் தலையாயக் கொள்கையாகக் கொண்டன” (தமிழர் சமுதாயம்; 61). இதனை உணர்ந்த ஆரியக் கூட்டம் தமிழ் நிலத்தின் பண்பாட்டுக் கூறுகளில் தங்களது கற்பனையை விதைத்துப் புராணங்களைப் பரப்பினர். வீரக்கல் வழிபாட்டில் கற்பனை புகுத்தப்பட்டது. திணைத் தலைவர்கள் கடவுள்களாக மாற்றப்பட்டனர். இந்த முயற்சியால் கடவுளை மையமிட்ட சமயங்கள் முளைத்தன. தமிழர்களின் பொருண் முதன்மைக் கருத்துகள் மறக்கப்பட்டு, எண்ண முதற் கருத்துகள் முதன்மை பெற்றன. இவ்வாறே, ஆரிய மரபினர் தமிழ்ச் சமூக மரபில் ஆதிக்கம் பெற்றனர் என்று விவரிக்கிறார்.

எந்தவொரு கருத்திற்கும் (Contention) சமூக அடிப்படை எனும் உருவம் (Form) உண்டு என்கிற விஞ்ஞானக் கொள்கையின் அடிப்படையிலேயே தமிழர் வரலாற்றின் தெரியாத பக்கங்களைத் தமிழ்ஒளி புதிய வகையில் எழுதுகிறார். ஆனால், ஓரிடத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மாயோன் பருந்தைப் பிடித்துப் பழக்கி அதன் மேல் ஏறிச் சென்றதாகவும் சேயோன் மயிலைப் பிடித்துப் பழக்கி அதன் மீதேறிப் பறந்து சென்றாகவும் குறிப்பிடுவது நடைமுறைக்கு ஒவ்வாத கருத்தாகப் படுகிறது. இங்ஙனம் “வரலாற்றில் பழமை தொன்மமாகிறது; புனிதமாகிறது. அண்மைக் காலத்திய கடந்தகாலம் (Contemporary Past) அதன் நவீனமாகிறது. பழமையும் நவீனமும் நேர்க்கோடாகவும், அ-நேர்க்கோடாகவும் கருத்தாடல் புரிகின்றன. இவை தீர்வுகளைவிடச் சிக்கல்களை முன்னிறுத்துகின்றன” (பக்தவத்சல பாரதி; 2020: VII) என்கிற கருத்தைக் கவனப்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில் மேற்சுட்டிய தமிழ்ஒளியின் கருத்து தீர்வை விடச் சிக்கலை அதிகப்படுத்தி விடுகிறது. விரிவான பல்துறை (Interdisciplinary) ஆய்வுகளின் வழியே தான் அதனை மெய்ப்பிக்க முடியும். ஆனாலும் அவர் கண்டடைந்த வளர்ச்சிப் படிநிலை தமிழ் வரலாற்றில் புதிய சிந்தனைகளுக்குத் திறப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

நிறைவாக

ஒருவகையில் தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றினைப் பூர்வ பௌத்தப் பார்வையில் விவரித்த பண்டிதர் அயோத்திதாசருடன் ஒப்புநோக்கத்தக்கவராய் இருக்கிறார் கவிஞர் தமிழ்ஒளி. விஞ்ஞானக் கண்ணோட்டத்துடன் தமிழ்ச் சமூக வளர்ச்சியைப் பற்றிய வரலாற்றை விவரித்த ஆய்வுக் கருத்துகள் பலவும் மேலாய்விற்கான பொருட்திட்பம் உடையவை. மார்க்சியத் தத்துவ இயலைப் பின்பற்றிய அவரது ஆய்வில் திராவிடம் மற்றும் தமிழினம் என்கிற உணர்வு மேலோங்கி இருப்பதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக, இக்கட்டுரையில் சுட்டப்படாத இன்னும் பல கருத்துகள் அவரது ஆய்வில் நிறைந்துள்ளன. ‘தமிழ்’ என்கிற பதத்தால் சுட்டக்கூடிய (மொழி, மக்கள், நிலம், வரலாறு) அனைத்தையுமே தமது மாறுபட்ட கண்ணோட்டத்தால் அணுகி மிக எளிமையாகவும் நுட்பமாகவும் விளக்கிச் செல்கிறார். அக்கருத்துகள் எதுவும் முடிந்த முடிவல்ல என்றாலும் அவ்வளவு எளிமையாகக் கடந்துவிடக் கூடிய ஒன்றல்ல. இதுவரை அவரது கவிதைகளும் காப்பியங்களும் பேசப்பட்டது போல், வருங்காலங்களில் தமிழ்ச் சமூக வரலாற்றைக் கட்டமைத்த கவிஞரின் ஆய்வு நோக்கும் விரிவாக ஆராயப்பட வேண்டும். அதுவே நமது கடமையுமாகும்.

பார்வை நூல்கள்:

  • சிவஞானம், ம.பொ., தமிழும் சமஸ்கிருதமும், பூங்கொடி பதிப்பகம், சென்னை, 1984.
  • தங்கவேல், த., தமிழரைத் தேடி, பாரதி புத்தகாலயம், சென்னை, 2022.
  • தங்கவேல், த., மீண்டும் ஆரியரைத் தேடி, சமூக இயங்கியல் ஆய்வு மைய வெளியீடு, கோயம்புத்தூர், 2015.
  • தமிழ்ஒளி, தமிழர் சமுதாயம், புகழ் புத்தகாலயம், சென்னை, 2020.
  • தமிழ்ஒளி, தமிழும் சமஸ்கிருதமும், வள்ளுவர் பண்ணை, சென்னை, 1960.
  • பக்தவத்சல பாரதி, தமிழர் பண்பாட்டு வரலாறு இன வரலாறு நவீன ஆய்வு முடிவுகள், அடையாளம் வெளியீடு, திருச்சி, 2020.
(செப்டம்பர் 20 - 21, 2023இல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை மற்றும் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு இணைந்து நடத்திய 'கவிஞர் தமிழ்ஒளியின் படைப்புலகம்' என்கிற தேசியக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை.)

Comments

Popular Posts